Friday, May 17, 2013

மனசு - ஸபீர் ஹாபிஸ்

அதிபர் அஸ்ரப் குவார்ட்டசுக்கு வந்து சேரும் போது மாலை ஆறு மணி ஆகி விட்டிருந்தது. உடைகளை மாற்றிக் கொண்டு இரவுணவுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினார். அன்றைய நாள் அவரைப் பொறுத்த வரை மறக்க முடியாத ஒரு நாள். காலையில் கண் விழிக்கும் போதே ஏதோ ஓர் அசம்பாவிதம் நடக்கப் போவதாக மனதுக்குள் அசரீரி ஒலித்துக் கொண்டிருப்பதை கலவரத்துடன் உணர்ந்திருந்தார். மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அதிகாரிகள் எனும் பெயரில் அந்தச் சங்கடம் தன் முன்னிலையில் வந்தமர்ந்த போது அவரது இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.

பெரும் சக்தி மிக்க அரச நிறுவனமொன்றின் பிரதிநிதிகளை எவ்விதத் தயக்கமோ அச்சமோ இன்றி மிகச் சாதாரணமாகவும் சாமர்த்தியமாகவும் கையாண்ட முகைதீனின் அணுகுமுறையில் அஸ்ரப் வாயடைத்துப் போனார். முகைதீன் ஆசிரியரையெண்ணிப் பெருமிதப்பட்டுக் கொண்ட சந்தர்ப்பங்களில் இதுவே உச்சமானது எனவும் அவர் நினைத்தார்.

இதற்குச் சில மாதங்களுக்கு முன்னர், சக ஆசிரியர் ஒருவரின் சபலத்தினால் கொந்தளித்து வந்த பெற்றோரை அமைதிப்படுத்தி அடக்கியதிலும், இளம் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் சீனியர் ஆசிரியர்களுக்குமிடையே உண்டான பெருங் கைகலப்பை எவருக்கும் பாதிப்பின்றிச் சுமுகமாகத் தீர்த்து வைத்ததிலும் நாற்பதே வயது நிரம்பிய முகைதீனின் ஆளுமையை அறிந்து வியந்து போயிருந்தார் அஸ்ரப். இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் தான் சுகவீன விடுமுறையில் நின்றது இப்பிரச்சினைகளில் மாட்டி விடாது தப்பித்துக் கொள்ளவே என்பது அவரைத் தவிர யாருக்கும் தெரியாது. சக ஆசிரியர்கள் தன்னை விடக் கூடுதலாக முகைதீனை மதிப்பதில் நியாயம் இருக்கவே செய்கிறது என்ற ஆறுதலுடன் பல சங்கடங்களையும் நெருடல்களையும் அவர் தவிர்த்திருக்கிறார்.

இத்தனைக்கும் முகைதீன் நன்கு படித்தவரோ, பணக்காரக் குடும்பப் பின்புலத்தைக் கொண்டவரோ, அரசியல் செல்வாக்கு மிக்கவரோ அல்ல என்பதுதான் அஸ்ரபுக்கு மிகவும் ஆச்சரியமான விடயம். அவரது தந்தை கலந்தர் தோட்டங்களிலும் வயல்களிலும் கூலி வேலை செய்பவர். நேர்மைக்குப் பெயர் பெற்ற நல்ல உழைப்பாளி. தாய் பாயிழைத்து, பெட்டி தட்டுகள் பின்னி, அகப்பை செய்து வீடு வீடாக விற்கும் மற்றோர் உழைப்பாளி. கலந்தரை தமது வயலிலோ தோட்டத்திலோ வேலைக்கமர்த்திக் கொள்வதில் முதலாளிமாருக்கும் போடிமாருக்குமிடையே போட்டியே நிலவுவது போலிருக்கும். முதலாளி ஊதாரி எனத் தெரிந்தால், கிடைக்கின்ற பெருமளவு வருமானங்களை இரகசியமாகச் சேர்த்து வைத்திருந்து முதலாளி சிரமப்படும் சந்தர்ப்பம் பார்த்து அவற்றைப் புதையலாகத் தோண்டியெடுத்துக் கொடுக்கும் அவரது நேர்மை அவர் பற்றிய முக்கிய அடையாளமாக எல்லோர் பேச்சிலும் அடிபடும். அதிகரித்த சம்பளத்திற்காகவோ, முகஸ்துதிக்காகவோ அவர் ஒருபோதும் கொடுத்த வாக்கை மீறியதில்லை. பேசிய சம்பளத்தை விடக் கூடுதலாகக் கிடைக்கும் அன்பளிப்புகளையும் ஒருபோதும் ஏற்றதுமில்லை.

அவரது இரண்டாவது திருமணத்தில்தான் முகைதீன் பிறந்தார். முதல் மனைவி ராஹிலா ஆறு மாதங்களே அவரோடிருந்தாள். சொந்தமாக நிலபுலங்களுடன் இருந்த அவரது சொத்துகளையெல்லாம் அழித்து விட்டு, பணக்கார இளைஞனொருவனுடன் ஓடிப்போன அவள் மீது அவருக்கு இன்னமும் அனுதாபமுண்டு. கூலி வாழ்க்கையில் கிடைக்கின்ற சுகத்தையும் ஆறுதலையும் எண்ணிப் புளகாங்கிதமடையும் போதெல்லாம் ராஹிலாவை நினைக்க அவர் தவறுவதில்லை. அவள் ஓடிப்போன செய்தியறிந்து துக்கம் விசாரிக்க வந்தவர்கள், தமது வார்த்தைகளில் அவளை வறுத்தெடுத்தார்கள். கொலை செய்தாலும் குற்றமில்லையெனக் கறுவினார்கள். இத்திருமணம் செல்லுபடியாகாது எனச் சில மௌலவிமார்களும் ஆறுதல் கூறினார்கள். இவ்வாறெல்லாம் கூறியவர்கள், இரண்டு மாதங்களில் புதிய கணவனுடன் அவள் திரும்பி வந்து தடபுடலாக வலீமா விருந்துக்கு அழைத்த போது, அதைப் பெரும் கௌரவமாக நினைத்து வயிற்றை நிரப்பிக் கொண்டு வந்தார்கள். அந்த விருந்தின் சுவை பற்றியும் ஆடம்பரம் பற்றியுமான பேச்சுகள் அடங்க அவர்களுக்கு ஒரு மாதமாயிற்று. மௌலவிமார்கள், அத்திருமணத்திலுள்ள குறைபாடுகளைச் சரி செய்து விட்டதாக அறிவித்தார்கள். அவர்களது உதடுகளிலும் கைகளிலும் ராஹிலா தம்பதியர் வைத்த விசேட விருந்துபசாரத்தின் எச்சில்களும் என்வெலப்புகளும் இருந்தன.

ராஹிலா தன் புதிய கணவன் நசீருடன் இரண்டு மாடி வீடொன்றில் வசித்து வந்தாள். அவள் விரும்பிக் கேட்ட எல்லாவற்றையும் ஹலால் ஹராம் பாராது வாங்கிக் கொடுத்தான் நசீர். அதற்கேற்ற பொருள் வளமும் ஆர்வமும் அவனிடமிருந்தன. செலவு செய்வதில் அவனுக்கிருந்த விரிந்த கைகள், அவனது பரம்பரைச் சொத்து. சிறுவயதிலிருந்தே ஆடம்பரமாகவும் அநாவசியமாகவும் செலவழித்துப் பழகிய அவனது கைகளுக்கு, ராஹிலாவின் விருப்பங்களெல்லாம் ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. தவிரவும் பெண்களுக்காகச் செலவழிப்பதில் அவனுக்கு எப்போதுமே அலாதியானதொரு சந்தோஷமும் திருப்தியும் இருந்தன. முதலாம் தரத்தில் சக மாணவியொருத்திக்கு ஐஸ்பழம் வாங்கிக் கொடுத்ததிலிருந்து தொடங்கியது இப்பழக்கம். அதன் பிறகு சொக்லெட்டுகள், பிஸ்கெட்டுகள், கைக்கடிகாரங்கள், ஸ்கூல் பேக்குகள், உடுப்புகள், மோதிரங்கள் என அவனது வயதுக்கேற்ப வாங்கிக் கொடுக்கும் அன்பளிப்புகளும் வளர்ச்சி கண்டன. அழகான டீச்சர்மார் கூட அவனிடமிருந்து ஹேண்ட் பேக்குகளையோ குடைகளையோ சாரிகளையோ அன்பளிப்பாகப் பெற்றுக் கொள்வதிலிருந்து தப்பிக்க முடியவில்லை. சிலபோது வயதில் பெரிய மாணவிகள் கூட அவனது அன்பளிப்புக்குப் பிரதியீடாக, உடைகளைத் தளரவிட்டு அவனுடன் தனிமையில் ஒதுங்கியதுண்டு. கண்களால் பார்த்து ரசித்து, கைகளால் தடவிச் சிலிர்த்து, அவன் போக அனுமதிக்கும் வரை, அவர்கள் தம் கைகளுக்குள் முகம் புதைத்து நாணிச் சிவந்திருப்பர். அதைத் தவிர வேறென்ன செய்வதென அப்போது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. தண்ணீராகச் செலவு செய்யும் அவனது விரிந்த கைகளுக்குள் அடைக்கலம் தேடிக் கொள்ள நண்பர்கள் முண்டியடிப்பதில் அவனுக்கு விறைப்பான பெருமையிருக்கும். பன்னிரண்டு வயதிலேயே பள்ளிப்படிப்பை இடைநிறுத்தி விட்டாலும், பெண்கள் மீதான ஈடுபாடு மட்டும் கட்டுப்பாடின்றி வளர்ந்ததன் விளைவாக, அயலில் வசித்த பெரும்பாலான இளம் பெண்கள் பலரும் அவனிடம் அன்பளிப்புகளைப் பெற்று விட்டிருந்தனர். அழகாக இருந்து விட்டால் போதும், திருமணம் முடித்தவர்களா இல்லையா என்பதெல்லாம் நசீருக்கு ஒரு பிரச்சினையாகவே இருக்கவில்லை.

முதலில் வாப்பாவின் ஷேர்ட் பக்கெட்டிலும் உம்மாவின் அரிசிப் பானையிலும் தனது ஆடம்பரச் செலவுக்கான பணத்தைக் கண்டெடுத்தான் நசீர். அது போதாமலான போது, வாப்பாவின் வீட்டு பேங்க் பெட்டியிலும் கை வைத்தான். அந்த பேங்க்கைத் திறப்பது அவனது வாப்பா லெப்பைக்கு மட்டுமே தெரிந்த இரகசியம். பணக்கட்டுகள், நகைகள், வளவு உறுதிப்பத்திரங்கள் போன்றவற்றை ஓர் ஒழுங்கில் அடுக்கி வைத்து மிகப் பாதுகாப்பாக அதைப் பேணி வந்தார் லெப்பை. பேங்க் வைக்கப்பட்டிருந்த அறைச் சாவி எப்போதும் அவரது இடுப்பு வாரில் பத்திரமாக இருக்கும். ஊர் முழுக்கப் பரந்திருக்கும் கடைகளின் வாடகைப் பணம், அடகுக்காகக் கிடைக்கின்ற நகைகள், காணி உறுதிகள் என்பவற்றுக்கெனத் தனியான இடமொன்றை அதனுள் ஒதுக்கியிருந்தார். தனது சொந்த உழைப்புகளைப் பத்திரப்படுத்துவதற்கு பிறிதோர் இடத்தையும் ஒதுக்கியிருந்தார்.

கூலிக்காரர்கள், விவசாயிகள் தமது தொழில் மூலதனமாகச் சிறிய தொகையொன்றை லெப்பையிடம் பெற்று அடமானமாகத் தாம் வாழும் நிலத்தின் அல்லது தொழில் செய்யும் வயலின் உறுதிப்பத்திரங்களைக் கொடுத்துச் செல்வர். கடனைச் செலுத்த முடியாது மேலும் கஷ்டத்தில் அவர்கள் திணறும் போது, மற்றொரு சிறுதொகைப் பணத்தை அவர்களுக்குக் கொடுத்து, நிலத்தை அல்லது வயலை தனக்குச் சொந்தமாக்கிக் கொள்வார் லெப்பை. எதிர்த்துப் பேசும் திராணியற்று மனது பரிதவிக்க நெஞ்சடைத்துச் செல்லும் அவர்கள் மீது சிறிதளவேனும் அவருக்குக் கருணை எழாது. சோர்வற்று உழைக்கும் அம்மக்களின் அறியாமை, லெப்பையின் வீட்டு பேங்க்கில் பெரும் செல்வமாக நிரம்பியது.

நாளாந்தம் பேங்கைத் திறந்து தனது சேமிப்புகளை ஆசை தீரத் தடவிப் பார்க்கும் குரூரப் புத்தியிருந்தாலும், தனது மனைவிக்காகவும் பிள்ளைகளுக்காகவும் அவற்றிலிருந்து எடுத்துச் செலவிடுவதில் அவர் அவ்வளவு தயக்கம் காண்பித்ததில்லை. எல்லோரையும் விடத் தனது மூத்த மகளான ஜெசீமா மீது அவருக்கு அளவற்ற அன்பிருந்தது. அவள் பிறந்த பின்னர்தான், தனது தொழில் முயற்சிகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டதாக அவர் உறுதியாக நம்பியிருந்தார். அதை விடவும் வாய்பேசாத அவளது இயலாமை ஏற்படுத்திய அனுதாபந்தான் அவள் மீதான அவரது கூடுதலான பாசத்திற்குக் காரணம் என எல்லோரும் நினைத்தனர். மற்றொரு காரணம் அவளது சுறுசுறுப்பான வேலைகளும் மலர்ந்த முகமும். அதிகாலையில் எல்லோருக்கும் முதலில் கண் விழித்து விடும் ஜெசீமா, அகன்று விரிந்த முற்றத்தை, கொட்டிக் கிடக்கும் அடர்ந்த மரங்களின் சருகுகளை அகற்றிச் சுத்தம் செய்வாள். கிணற்றில் அள்ளி சுற்றி நிற்கும் பயிர்களுக்கும் செடிகொடிகளுக்கும் நீரூற்றுவாள். சட்டியில் நீர் நிரப்பித் தீனும் வைத்து கோழிக்கூட்டைத் திறந்து விடுவாள். மாட்டுக் கொட்டகைக்குள் சென்று சாணங்களை அள்ளிக் கூடைக்குள் நிரப்பிச் சுத்தம் செய்த பின் தொட்டியில் நீர் நிரப்புவாள். இவ்வளவையும் முடித்து விட்டு, பால் கறப்பதற்காகக் கோப்பையுடன் கொட்டகைக்குள் நுழையும் போதுதான், காலைக் கதிரவனுடன் இணைந்து அவளது வீட்டாரும் கண் விழிப்பார்கள்.

தொடர்ச்சியான வேலைகளினால் மிகச் செழுமையான தேகக்கட்டுடனும் வசீகரிக்கும் வாளிப்புடனும் இருந்த ஜெசீமா பதினைந்து வயதுப் பிள்ளை என்று சொன்னால் யாருமே நம்பமாட்டார்கள். கள்ளங்கபடமற்ற அவள் அந்த வீட்டில் எல்லோருடனும் சகஜமாகப் பழகினாள். வீட்டுக்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பது முதற்கொண்டு அனைத்தையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள். வாப்பாவின் வயலில் காவலுக்கு நிற்கும் முல்லைக்காரன், மில்லில் வேலை செய்யும் கணக்குப் பிள்ளை, மிசினில் நிற்கும் ரைவர் எல்லோரும் வாரத்தில் இரண்டு மூன்று தடவைகளாவது அவளது கையால் தேநீர் குடித்து விடுவார்கள். மற்றவர்களை விட மிகுந்த பவ்யத்துடன் அவளிடமிருந்து தேநீரை வாங்கி அருந்துவான் ரைவர் கந்தசாமி. தன் கண்ணெதிரே பிறந்து வளர்ந்த பிள்ளையான அவள் மீது கந்தசாமி மிகுந்த அன்பும் மதிப்பும் வைத்திருந்தான். காலையில் மிசினை எடுக்கும் போதும், அன்றோ மறுநாளோ மாலையில் கரேஜில் போடும் போதுமாக நாள் தோறும் அந்த வீட்டுக்கு அவன் வந்து செல்ல வேண்டியிருந்தது.

காளி கோவிலக்கருகில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளுமாக வசிக்கும் கந்தசாமி, வாகனங்கள் ஓட்டுவதில் கைதேர்ந்தவன். எல்லா வாகனங்களும் அவனுக்கு அத்துப்படி என்பது போலவே, எல்லா வேலைகளும் கூட அவனுக்கு அத்துப்படிதான். அந்த வீட்டில் நல்ல சம்பளத்துடன் அரிசி மூடைகளும் தேங்காய்களும் மாதாந்தம் போதுமான அளவு அவனுக்குக் கிடைத்து வந்தன. அங்கு எவ்விதக் குறையும் அவனுக்கிருக்கவில்லை. கிடைத்த வருமானத்தில் ஒரு பகுதியை எடுத்து வட்டிக்கு விட்டிருந்தான். அதில் கிடைத்த இலாபத்தில் தங்க நகைகளை வாங்கி, பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் மகளுக்கெனச் சேமித்து வைத்தான். மனைவியும் அவனும் சேர்ந்து மிகச் சிக்கனமாக இருந்து சேகரித்து அலுமாரிக்குள் பத்திரப்படுத்தி வைத்திருந்த பதினைந்து பவுண் நகைகளும் ஓர் இரவு காணாமல் போன போது, அந்த அதிர்ச்சியில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்து விழுந்து இறந்து போனான் கந்தசாமி. கணவனின் சடலத்தின் மீது விழுந்து வெறி கொண்டவள் போல் கதறி அழுதாள் கமலா. அவள் வாழ்க்கையில் சந்திக்கும் முதலாவது இழப்பு இது. அவளது அப்பா, அம்மா, அவர்களது அப்பா, அம்மா, உடன்பிறப்புகள் எல்லோரும் உயிரோடுதான் இருக்கிறார்கள். குடும்பத்தாரின் கடுமையான எதிர்ப்புகளையெல்லாம் சமாளித்து, பெரும் சிரமங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் அவள் கரம் பற்றிய கணவன் மட்டும் அவளை நட்டாற்றில் விட்டு விட்டுக் கோழை போலச் செத்து விட்டான்.

இனி, “கீழ்சாதிகளைக் கட்டிக்கிட்டா இதுதான் கதி” என்று கூறிக் கொண்டு குடும்பத்தைச் சேர்ந்த யாரேனும் உறவைப் புதுப்பித்துக் கொள்ள வருவார்கள் என அவள் எதிர்பார்த்தாள். அவர்களுக்குக் கூறுவதற்கு அவளிடம் எந்த பதிலுமில்லை. பழைய திடகாத்திரம் உடலிலும் உள்ளத்திலுமிருந்து தொலைது}ரம் ஓடி விட்டது போல அவளுக்குத் தோன்றியது.

பொலிசில் முறைப்பாடு செய்து திருடனைப் பிடிக்கும் படியாக, சடங்குக்கு வந்த பலரும் கமலாவை வற்புறுத்தினர். அயலில் வசித்தவர்கள் அதற்கான முழு ஒத்துழைப்பையும் தருவதாக அவளுக்குத் தெம்புமூட்டினர். கமலாவுக்கோ அதிலெல்லாம் ஆர்வம் எழவில்லை. இழப்பின் வலி அவளில் ஏற்படுத்திய அவநம்பிக்கையே இதுவெனச் சிலர் எண்ணிய போதும், உண்மையில் இந்தத் திருட்டின் பின்னணியில் நாதனும் அவனது சகாக்களுமே இருப்பர் என்பது கமலாவுக்கு உறுதியாகத் தெரிந்திருந்தது.

தூரத்து உறவினனான நாதன் அவளுக்குத் தம்பி முறை. தொழில் இல்லாத சந்தர்ப்பங்களில், மதிப்பற்ற விருந்தாளி போல், அவளது வீட்டில் கிடந்து வேலைகளைச் செய்து கொடுத்து மூன்று வேளையும் வயிற்றை நிரப்பிக் கொள்வது அவனது வழக்கம். தாய் தகப்பனை இழந்த பதினாறு வயதிலிருந்து நிலையான இருப்பிடமோ தொழிலோ இல்லாது ஏதாவது வேலை செய்து எதையாவது உண்டு எங்காவது உறங்கி காலம் கடத்தி வந்தவன், எப்படியோ கமலாவை உறவு கண்டு பிடித்து அவளிடம் வந்து சேர்ந்த போது இருபது வயதிலிருந்தான். வீட்டில் ஆண் இல்லாத நேரம் பார்த்து வந்து உண்டு தங்கிச் செல்வான். புதிய பழக்கமாக, நண்பர்கள் என இரண்டு பேரை உடன் அழைத்து வந்த போது, அவனது உள்ளத்தில் திட்டமொன்று இருந்தது.

இதற்கு முன்னர் தங்கிய வேளையில், தற்செயலாகக் கண்களில் பட்ட நகைகள், அலுமாரிக்குள் இருந்து கொண்டு அவனைக் கிண்டல் செய்து கொண்டிருந்தன. இரவில் எல்லோரும் து}ங்கிய பிறகு கள்ளச் சாவி கொண்டு அலுமாரியைத் திறந்து நகைகளை அள்ளுவதெனவும், இடையில் வீட்டில் யாரும் கண்விழித்துச் சத்தம் போட்டால் அவர்களது குரல் வளையை அறுப்பது மற்ற இருவரதும் பொறுப்பெனவும் திட்டமிட்டிருந்தான் நாதன். அதிர்ஷ்டவசமாக எவ்வித அசம்பாவிதங்களுமில்லாது நகை முழுவதையும் களவாடிக் கொண்டு காலையில் வழமை போன்று வீட்டிலிருந்து வெளியாகி வந்த பிறகுதான் நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது அவனால்.

அவன் இதுவரைக்கும் களவாடியவற்றுள் மிகப் பெறுமதியான களவு இதுதான். வழமை போன்று செட்டிக்கடை சாந்தனிடம் கொண்டு சென்று கொடுத்தான். இவ்வளவு அதிகமான களவு நகைகளைப் பார்ப்பது சாந்தனுக்கும் இதுவே முதற்தடவை. அடகு வைப்பதற்கு அல்லது விற்பதற்கு வருகின்ற நகைகளுக்கு, அப்போதைய பவுணின் விலை, கொண்டு வருபவரின் முகபாவனை, மேசை டிராயரிலுள்ள இருப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு விலையைத் தீர்மானிப்பான் சாந்தன். அவன் விலையொன்றைத் தீர்மானித்து விட்டானென்றால், அதன் பிறகு அதிலே எந்த மாற்றமுமில்லை. களவு நகைகளையும் சொந்த நகைகளையும் துல்லியமாகக் கணித்து விடுவது அவனது மிகப்பெரிய அனுபவத் திறமை.
அநாமதேயமாக பஸ்ஸில் கண்டெடுத்த சில லட்சம் ரூபாய்களை மூலதனமாகக் கொண்டு நான்கு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த இத்தொழில் அவன் எதிர்பாராதளவுக்கு மிகப் பெரிய வருமானத்தை ஈட்டிக் கொடுத்தது. சொந்த வீடு கட்டி ஊரில் ஆங்காங்கே வளவுத் துண்டுகளையும் வயல் நிலங்களையும் வாங்கிப் போட்டு, முக்கிய ஊர்ப்பிரமுகனாக குறுகிய காலத்திற்குள் மாறிவிட்டிருந்தான் சாந்தன். நகை வடிவமைப்பு நுட்பங்களையும் விரைவில் கற்றுக் கொண்டான். அடகுக்காக வைக்கப்படும் 22 கரட் நகைகள், மீட்கப்படும் போது 18 கரட்டாக மாறியிருந்தாலும் ஒத்த வடிவம் என்பதனால் யாரும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நகை வியாபாரிகளின் பற்றாக்குறையினால் சாந்தனின் வருமானத்திற்கு எவ்வித முட்டுக்கட்டையும் ஏற்படவில்லை. நிரம்பி வழிந்த பணத்தில் வீடுகளை வாங்கிப் போட்டு வாடகைக்கு விட்டான். எஞ்சிய வீடொன்றில் மணமுடிப்பதாகக் கூறி வசந்தகுமாரியைக் குடியமர்த்தினான்.

பதினெட்டு வயதிலிருந்த வசந்த குமாரி, மாநிறத்தில் கொழுத்த மார்பகங்களுடன் நகையொன்றை விற்க வந்த போதுதான் சாந்தனைச் சந்தித்தாள். மணமுடித்த இரண்டே நாட்களில் யானையொன்றினால் நசுக்கப்பட்டு இரு கால்களையுமிழந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் கணவனையும் அவனது ஐந்து ஏக்கர் வயல் நிலத்தையும் பராமரித்து வர வேண்டிய பொறுப்பும் சிரமமும் அவளுக்கிருந்தன. முழுமையாக அனுபவித்தறிந்திராத தாம்பத்திய சுகம், சாந்தனின் அணைப்பில் திருப்தியாகக் கிடைத்த போது, தனக்காக எதுவும் செய்திராத ஒருவனைப் பராமரிக்க எதற்காகத் தன் இளமையையும் வாழ்க்கையும் அர்ப்பணிக்க வேண்டும் என்ற நியாயமான தர்க்கமொன்று அவளுள் எழுந்தது. அதிலிருந்து இரண்டு தினங்களில் தனது உடைகளைப் பொதியாகக் கட்டிக் கொண்டு சாந்தனின் வெறுமையான வீட்டிற்கு இடம்பெயர்ந்தாள் வசந்தகுமாரி. நாளாந்தம் மூன்று வேளைச் சாப்பாடும் வாரத்தில் மூன்று நாட்கள் தாம்பத்திய சுகமும் எவ்விதச் சிரமங்களுமின்றி அவளுக்குக் கிடைத்து வந்தன. ஏனைய நான்கு இரவுகளில் தனிமை அவளை வாட்டும். ரிவி பார்ப்பதும் அலுத்துப் போயிற்று. கேலிப் பார்வையையும் நகைப்பையும் தவிர்ப்பதற்காக அயலாருடனான உறவையும் துண்டித்திருந்தாள். இருட்டறைக்குள் தனித்து விடப்பட்ட வெறுமையை உணரும் நாட்களில் பழைய கணவன் சுந்தரத்தின் நினைவுகள் அவளுள் மலரும்.

அத்தான் முறை என்ற போதிலும் திருமணத்தன்றுதான் அவனை முதன் முதலில் கண்டாள். ஆறடி உயரத்திலும் அகன்ற தோள்களிலும் தெரிந்த அவனது கறுப்பு முகம் அவளை வசீகரிக்கவே செய்தது. சித்தி வீட்டிலிருந்தவளை விடுவித்து அழைத்துக் கொண்டு, தொலைவிலிருந்த தனது கிராமத்திற்கு வந்தான் சுந்தரம். பச்சைப் பசேலென்ற அந்தக் கிராமத்தில் சோலைகளின் நடுவே அமைக்கப்பட்ட சொர்க்கம் போல் அவனது வீடு இருந்தது. சுற்றிவர இருந்த காடுகளிலிருந்து அவ்வப்போது ஓங்கி ஒலிக்கும் யானைகளின் பிளிறல்களும் நரிகளின் ஊளைகளும் அவனைத் து}ங்க வைக்கும் தாலாட்டுகள். அப்பாவிடமிருந்து பரம்பரைச் சொத்தாகக் கிடைத்த ஐந்து ஏக்கர் பொன்கொழிக்கும் பூமியைத் தன் வாழ்வாதாரமாகப் பராமரித்து வந்தான். ஒரு படுக்கையறையும் சமையலறையும் விறாந்தையுமாகக் களிமண்ணால் வேயப்பட்டு தென்னோலைகளினால் கூரையிடப்பட்டிருந்த வீடு அவனது இரண்டு வருட உழைப்பு மீதியின் பெறுபேறாக அவனை எப்போதும் பெருமை கொள்ளச் செய்யும். பதினான்கு வயதிலேயே அவனைத் தனியாக விட்டு விட்டு, அவனது அம்மாவைத் தேடி அப்பா ராமலிங்கமும் செத்துப் போயிருந்தார். அவர் செத்த அன்று சுந்தரம் கண்ணீர் வடித்தழுதான். அதற்கு முன்னரோ பின்னரோ ஒருபோதும் எதற்காகவும் அவன் கவலைப்பட்டதுமில்லை, கண்ணீர் வடித்ததுமில்லை. தந்தை மீது அவனுக்கு அளவற்ற பாசமிருந்தது. சிறு வயதிலேயே தாயை இழந்த விட்டமையால் எல்லாமுமாக இருந்து அவர் அவனை வளர்த்தார்.

மெலிந்த கறுத்த உருவம் கொண்ட ராமலிங்கம் வயல் வேலைகளில் கைதேர்ந்தவர். இரவில் மிகச் சொற்ப நேரமே து}ங்குவார். சாமத்தில் துயிலெழுந்து பரபரப்பாகச் செய்வதற்கு எப்போதும் அவருக்கு வேலைகள் இருக்கும். வயல் காவல் பணிகளில் அவரை விஞ்ச யாருமில்லை. மலத்தைத் தின்று விட்டு மூர்க்கமான போதையுடன் வரும் பன்றிகளிடமிருந்தும் ஆக்ரோஷமாகப் பிளிறிக் கொண்டு வரும் யானைகளிடமிருந்தும் வேளாண்மையைப் பாதுகாப்பதில் அவர் சிறந்த அனுபவசாலியாக அறியப்பட்டிருந்தார். ஐந்து ஏக்கர் வயலைத் தவிர்த்து, அவருக்குச் சொந்தமாக இருந்த மற்றொரு சொத்து பசு மாடு. தெய்வத்தின் அவதாரமாகத் தெரியும் அந்த வெள்ளைப் பசு மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார் ராமலிங்கம். வாய் பேசாத உயிர்த்தோழன் போல் பெரும்பாலான நேரங்களில் அது அவருடனேயே நின்றிருக்கும். பசுக்களுக்கும் முகர்திறன் உண்டு என்பதை, எங்கிருந்தாலும் தன்னைத் தேடிக் கண்டுபிடித்து வந்து சேர்ந்து விடும் அதன் இயல்பிலிருந்து அறிந்திருந்தார்.

கடந்த வருடம் பால் குடி மறந்த குட்டியாய் இருந்த போது, அவரது உழைப்புக்கான வெகுமதியாக முதலாளி தேவசகாயத்திடமிருந்து அன்பளிப்பாகக் கிடைத்ததுதான் அந்தப் பசு. அதை ராமலிங்கத்திடம் ஒப்படைக்கும் போது, தேவசகாயத்தின் கண்களில் நிறைவான பெருமிதமொன்று இருந்தது. தனது பண்ணையில் ஒரு பசு போடும் முதலாவது குட்டியை தனது வேலையாட்களுக்கு வெகுமதியாகக் கொடுத்துவிடுவது அவரது வழக்கம். இதேபோன்றதொரு வழக்கத்தினு}டாகத் தனக்குக் கிடைத்த பசுவொன்றுதான் தனது தற்போதைய செழிப்புக்கெல்லாம் ஆரம்ப வித்து என அவர் அடிக்கடி கூறிக் கொள்வார். பொருளாதார வளமும் மனங்கோணாது வழங்கும் கொடைத்திறனும் சமூகத்தில் ஆரோக்கியமான செல்வாக்கொன்றை அவருக்குப் பெற்றுக் கொடுத்திருந்தன. அச்செல்வாக்கை மூலதனமாகக் கொண்டு அரசியலில் குதிக்குமாறு நண்பர்கள் கூறி வந்த ஆலோசனையை நீண்ட காலத்திற்குப் பின்பே அவர் ஏற்றார். பொதுத் தேர்தலில் கணிசமான வாக்குகள் கட்சிக்கும் அவரது இலக்கத்திற்கும் விழ, தமிழைத் தவிர வேறு மொழி தெரியாத தேவசகாயம் பாராளுமன்றத்திற்குத் தைரியமாகப் புறப்பட்டுச் சென்றார்.

தனது வெற்றிக்காகப் பாடுபட்ட எல்லோருக்கும் தனது சேவை வாய்ப்புகளின் போது முன்னுரிமையும் முக்கியத்துவமும் கொடுப்பதில் அவருக்குச் சிரமமிருக்கவில்லை. இன ரீதியான அடையாளமின்றி பொது மனிதனாகப் பணியாற்ற வேண்டிய பொறுப்பு அவருக்கிருந்தது. எனினும் அப்பொறுப்பை விமர்சனங்களெவையுமின்றிச் செய்ய முடியாமற் போனது அவரால். “எங்கட ஆக்களுக்கு வந்தத்த மாத்தியெடுத்து உங்கட ஆக்களுக்குக் குடுத்திட்டீங்க என?” என்று, அவரது எல்லா வெற்றிகளிலும் ஏணியாக நின்ற இஸ்மாயில் கொந்தளித்த போது, அவனை அழைத்துச் செல்லுமாறு காவலர்களுக்குக் கட்டளையிடுவதைத் தவிர அவரால் வேறொன்றும் செய்ய முடியவில்லை. அரசினால் அமைக்கப்படவிருந்த புதிய பல்கலைக்கழகத்தை, தனது மக்களுக்குப் பயன்படும் வகையில், தனது இனத்தார் வாழும் பிரதேசத்திற்குக் கொண்டு செல்ல, அரசியல் அதிகாரம் அவருக்குப் பெரிதும் உதவிற்று. இதனைக் குறித்து இஸ்மாயில் இவ்வளவு காட்டமாகச் சத்தமிட்டுச் செல்வது அவரைக் கஷ்டப்படுத்தவே செய்தது.

நீண்ட காலமாக தேவசகாயத்திடம் பணியாற்றி வந்த இஸ்மாயில், போதிய கல்வித் தராதரம் இல்லாத நிலையிலும், அரசியல் செல்வாக்கினு}டாக நிரந்தரமான அரச உத்தியோகமொன்றில் இணைந்து கொண்டான். உத்தியோகம் பெற்றதிலிருந்து அவனது நடவடிக்கைகளில் பெரிய மாறுதல்கள் தென்பட்டன. பதினைந்து வயது வரை பலமுறை முயன்றும் ஐந்தாம் தரத்திற்கு மேலே செல்ல அவனால் முடியவில்லை. பத்து வருடப் படிப்பில், எழுத்துப் பிழைகளுடனாயினும் தமிழில் சொல்வதெழுதப் பழகியிருந்தான். மாட்டுப் பண்ணையில் உதவியாளாக இணைத்து விடப்பட்ட போது இதுதான் அவனது கல்வித்தகைமை. அரசியல் என வந்த போது, போஸ்டர் ஒட்டுவது, கூட்டங்களை ஒழுங்கு செய்வது, துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பது, முதலாளியைச் சந்திக்க வருவோருக்குத் தேநீர் பரிமாறுவது போன்ற எடுபிடி வேலைகளை ஓய்வு ஒழிச்சலின்றிச் செய்தான். பத்து வருட அயராத உழைப்புக்கான கைம்மாறாகக் கிடைத்த அரச உத்தியோகம் ஆரம்பத்தில் மிகச் சிரமமாக இருந்த போதும், பின்னர் சுதாகரித்துக் கொண்டான் இஸ்மாயில். மற்றொரு பத்து வருடங்களை அவ் அரசப் பணியில் அர்ப்பணிப்புடன் செலுத்தியதன் விளைவாக து}ரநோக்கோடு சிந்திக்கும் ஆற்றலும் எத்தகைய பிரச்சினைகளையும் சிறப்பாகக் கையாளும் ஆளுமையும் அவனுக்கு வாய்க்கப் பெற்றன. பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற பலரும் அவனது முகாமைத்துவத்தின் கீழ் பணியாற்றுமளவு முக்கிய அரச நிருவாகியாகவும் சமூகக் கல்விமானாகவும் மாறினான். அதன் பிறகுதான் அரசியலில் குதிக்கும் எண்ணம் அவனுக்கேற்பட்டது. பரீட்சார்த்தமாக உள்@ராட்சித் தேர்தலில் நின்ற போது, எதிர்க்கட்சி வேட்பாளரான பாறுக்கிடம் மிகக் கடுமையாகத் தோற்றுப் போனான். தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாகக் கத்திய அவனது கூச்சல்களை அலட்சியம் செய்து, தனது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த வெற்றி விழாவில் வெகு விமரிசையாகக் கலந்து கொண்டான் பாறுக்.

பாறுக்கிற்கு அது இரண்டாவது தேர்தல் வெற்றி. ஏற்கனவே பதவி வகித்த ஐந்தாண்டுகளில் பெரிதாக எதையும் அவன் சாதித்து விடவில்லை. தனது கட்டளைகளுக்கு அடிபணியக் கூடியவராக செயலாளர் ஒருவரை நியமித்துக் கொண்டமையால், சேகரிக்கப்படும் பொது நிதியிலிருந்தும் அரச கொந்தராத்துகளிலிருந்தும் லட்சம் லட்சமாக உழைப்பதும் கமிஷன் பெறுவதும் அவனுக்கு மிகச் சாதாரணமாயிற்று. இவையே ஆடம்பரமான வீடையும் படகு போன்ற காரையும் அவனுக்குச் சாத்தியமாக்கின. சபைக்குப் போதிய வருமான மூலங்களில்லை என்ற தன் வழமையான ஒப்பாரியினு}டாக, பெருமளவு வருமானத்தைப் பதுக்கவும் அவனால் முடிந்தது. மக்களின் அதிருப்தி அதிகரிக்கத் தொடங்குகையில், திடீரென அரசியல் காரணங்களுக்காக சபையும் கலைக்கப்பட்டுப் புதிய தேர்தல் அறிவிக்கப்பட்டது. எனினும் தேர்தலின் போது அரிசி மூடைகளாகவும் உலர் உணவுப் பொதிகளாகவும் உடைகளாகவும் கற்றல் உபகரணங்களாகவும் மதுபோத்தல்களாகவும் பிரியாணிப் பார்சல்களாகவும் பதுக்கி வைத்திருந்த பணத்திலிருந்து ஒரு பகுதியைத் தண்ணீராகச் செலவிட்டதன் விளைவாக தேர்தலில் மீண்டும் பெரும் வெற்றி பெற்றான் பாறுக். தேர்தல் செலவில் மிகக் கணிசமான தொகையை பிரசாரத்திற்கென ஒதுக்கியமை அவனது வெற்றிக்கான மற்றோர் உபாயமாகும்.

முக்கியமாக பிரசார மேடைகளை அலங்கரித்த சகாப்தீன் ஆசிரியரின் நகைச்சுவையான பேச்சுகள் அவனது கூட்டங்களுக்கு மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வரப் பிரதான காரணமாக இருந்தது. கணீரென்ற குரலும், ஆற்றொழுக்கான தமிழ் நடையுடன் கூடிய செம்மையான உச்சரிப்பும், நகைச்சுவை ததும்பும் பாணியும் சகாப்தீன் ஆசிரியரின் முக்கிய சிறப்பம்சங்கள். குறுகிய காலத்திற்குள் தனது பேச்சாற்றல் மூலமாகப் பெரும் பிரபலம் பெற்றிருந்தார். அவ்வாற்றலை மூலதனமாக்கிய போது, தேர்தல் காலங்களில் பெரும் பணம் அவரது கைகளை நிறைத்தது. மேடைகளில் சகாப்தீன் ஏறி விட்டால், பார்வையாளர்களின் ஆரவாரக் கரகோஷம் விண்ணை முட்டும். அவர் கையமர்த்திப் பேச ஆரம்பிக்கும் போது மாபெரும் அமைதியொன்று பார்வையாளர்களின் மீது காரிருளாகக் கவியும். நகைச்சுவைக் கதைகளின் போது வாய்விட்டுச் சிரிப்பதையும், தத்துவக் கருத்துகளின் போது மேலும் கீழும் தலையாட்டுவதையும் தவிர்த்து ஏனைய சந்தர்ப்பங்களில் அவர்களது ஐம்புலன்களும் சகாப்தீன் மீது முற்றிலும் லயித்திருக்கும்.

கடந்த பத்து வருடங்களாக எண்ணற்ற தேர்தல் மேடைகளை அவர் பார்த்து விட்டார். கட்சியென்றோ கொள்கையென்றோ ஒரு குறுகிய வட்டத்திற்குள் தன்னை வரையறுத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை. பணம் ஒன்றே அவரது குறிக்கோள். யார் காசு கொடுத்தாலும் அவருக்காக மேடையேறி கருத்துகளையும் சிந்தனைகளையும் உரத்து முழங்குவார். ஆனாலும், ஒரே தேர்தலில் பலருக்கும் ஆதரவாகப் பிரசாரம் செய்வதில்லை எனும் கொள்கையொன்று எழுதப்படாத விதியாக அவரிடமிருந்தது. ஆரம்பித்து விட்டால், அந்தத் தேர்தல் முடியும் வரை, அவருடனேயே இருப்பார். முடியுமானவரைக்கும் பணத்தைக் கறப்பார். சிலபோதுகளில் பதவியுயர்வுகளும் சலுகைகளும் பெறுவார். எதிர்க் குழுவிலுள்ளோரின் எத்தகைய தாக்குதலும் அவரது உறுதியைத் தளர்த்தி விடாது. வீட்டுக்குக் குண்டெறிவது, சைக்கிள்களை எரிப்பது, இருட்டடி அடிப்பது என்பவற்றைத் தவிர அவர்களால் வேறெதைச் செய்து விட முடியும். எல்லா எதிர்ப்புகளும் அவருக்குப் பழக்கமாகிப் போயின. அவரது கொள்கை பற்றி எல்லோருக்கும் தெரிந்திருந்ததால், தேர்தல் ஒன்று வரப்போகிறது என்று தெரிந்தாலே வேட்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு அவரை மொய்க்கத் தொடங்கி விடுவர். வெற்றி பெற்றோர் தேர்தலின் பின்பும் நன்றிக்கடனாக அவரது தேவைகளுக்குக் கொடுத்தனுப்புவதனால், அவருக்குப் பணத்தட்டுப்பாடே ஏற்பட்டதில்லை. அவர் ஆதரவாகப் பிரசாரம் செய்தவர்களில் மூவர் நகர சபைத் தவிசாளர்களாகவும் இருவர் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் தெரிவாகியுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானவர்களுள் ஒருவர் இரண்டு வருடங்கள் பிரதிக் கல்வியமைச்சராகவும் பதவி வகித்தார். உயர்தரத்தில் ஃபெய்லாகி வேலையின்றிச் சுற்றித் திரிந்த தனது 25 வயது மகனுக்கு, பாடசாலையொன்றில் நிரந்தர ஆசிரியர் நியமனம் பெற்றுக் கொடுக்க, அவ்வமைச்சருடனான நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டார் சகாப்தீன்.

தனது மகன் அஸ்ரபிடம் நியமனக் கடிதத்தைக் கொடுத்த போது, வெற்றிப் புளகாங்கிதமொன்று அவரது முகத்தில் செழித்துக் குலுங்கியது. அஸ்ரப் 20 வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றி, பின் அதிபராகப் பதவியுயர்வு பெற்று, தற்போது ஓய்வுக்காகக் காத்திருக்கிறார். இருக்கின்ற கொஞ்ச காலத்திற்குள் எவ்விதப் பிரச்சினையும் இல்லாது காலத்தைக் கடத்த வேண்டுமே என்பதுதான் அவரது இப்போதைய ஒரே பயமாக இருந்தது.
இரவுணவை முடித்துக் கொண்டு படுக்கையில் சரிந்த அஸ்ரப் அதிபருக்கு மீண்டும் முகைதீன் ஆசிரியரின் நினைவு வந்தது.
***
நன்றி :  ஸபீர் ஹாபிஸ் , அம்ருதா , ஹனீபாக்கா

1 comment:

  1. அப்துல்லாஹ்May 24, 2013 at 7:23 AM

    தனியொரு கருவை வைத்துக் கொண்டு சுற்றிச் சுற்றி அதைப் பற்றியே கதையை உருவாக்கும் போக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இக்கதை உள்ளமை சிறப்புக்குரியது.

    ஆபிதீனின் கதைகளின் போக்கும் அவ்வப்போது எட்டிப் பார்க்கின்றது.

    ஒரே கதையில் பல பாத்திரங்களை கண் முன் நிறுத்தியமையினால் கதையைப் படித்து முடிக்கும் ஒரு பெரிய நாவலைப் படித்தது போன்ற நிறைவு ஏற்படுவதும் மகிழ்ச்சியளிக்கிறது.

    ReplyDelete